Wednesday, October 25, 2017

நம் வழிகாட்டி யார்?

மக்களை வழிகாட்டும் வண்ணம், இறைவனே மனித அவதாரமாக (Human Incarnation) வந்து வழிகாட்டலாமே? என கேள்வி எழலாம். கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப் பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. மாறாக, நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. 

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்? இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது? இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம். நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும். போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கூட கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை. 

'கடவுள் மனிதனாக வரவே மாட்டான்' என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம். இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம். கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்படவேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும். சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும். ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள். இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித் தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம். எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல. 

ஆக இறைவன் மனித அவதாரமாக வராமல், வழிக்காட்டுவதற்கு குறிப்பிட்ட சமூகத்திலிருந்தே ஒரு மனிதனை இறைதூதராக தேர்ந்தேடுத்து, வழிக்காட்டுவதற்கு இறைவேதங்களை அருளினார் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. அந்த இறைவேதங்கள் என்பது மக்களை வழிக்காட்ட பல்வேறு சமுதாயத்திற்கு தத்தமது மொழிகளிலேயே வழங்கப்பட்டது என கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. 

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்;  (அல்குர்ஆன் : 14:4) 

முதல் மனிதனை படைத்த கடவுள்,  அவரை அப்படியே திக்கற்றவனாய் விட்டு விடாமல் எதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும்?! நன்மையையும் தீமையையும் பிரித்து காட்டும் வகையில் கற்பித்தான். முதல் மனிதன்  தன்னுடைய சந்ததிக்கு இறைதூதராகவும் வழிக்காட்டியாகவும் திகழ்ந்தார்.  பிறகு சந்ததி பெருக பெருக, காலம் செல்ல செல்ல,  இடம்பெயர்தல் போன்றவற்றால் பல சமூகங்களாக ஆகும் என்பதை புரிந்துக் கொள்ளலாம். அந்த சமூகத்திற்கும் வழிக்காட்டும் பொருட்டு அச்சமூதாயத்திலிருந்தே ஒரு மனிதரை இறைதூதராக தேர்ந்தேடுத்து, அவருக்கு சட்டம் வழங்கி அவரது சமூகத்திற்கான வழிக்காட்டியாக ஆக்கினான். 

முதல் மனிதன் ஆதம் (Adam), பிறகு நூஹ் (Noah), இப்ராஹிம் (Abraham), லூத் (Lot), அய்யூப் (Job), சுலைமான் (Solomon) [இவ்வாறு ஏகப்பட்ட இறைதூதர்கள் பல காலத்திலும் பல சமுதாயத்திற்கும் வந்துள்ளார்கள்] பின்பு 3000 வருடங்களுக்கு முன்பு, மூஸா (மோஸே/Moses)என்ற இறைதூதர், யூத சமூதாயத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஆவர்.  இதுவரை வரக்கூடிய இறைத்தூதர்களை உலகின் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள் (Islam, Christianity, Judaism). அடுத்ததாக, ஈஸா (இயேசு கிறிஸ்து) என்ற இறைத்தூதர், தற்போதைய பாலஸ்தீன/இஸ்ரேல் பகுதியிலிருந்த யூத சமுதாயத்திற்காக 2000 ஆண்டு முன்பு இருந்தவர். இந்த இறைதூதரை, இறைதூதராக யூத சமுதாயம் ஏற்கவில்லை; பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது. இவரை கடவுள் ஸ்தானத்திற்கு உயர்த்தி கிறிஸ்தவர்களில் (பெரும்பான்மையான பிரிவினர்) வணங்குகிறார்கள்; இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல, இறைத்தூதரே; அவர் ஒரு மனிதரே! மனிதன் கடவுளாக முடியாது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து இறைத்தூதரும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்த சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். வெறுமனே இறைதூதர்கள் அனுப்புவது மட்டுமின்றி, சில போதனைகளையும், இறை சட்டங்களையும் கொண்ட வேத புத்தகங்களையும் இறைவன் அருளினான். இறைத்தூதர் தாவூத் அவர்களுக்கு ஜபூர்என்ற வேதமும், இறைதூதர் மூஸா அவர்களுக்கு தவ்ராத்என்ற வேதம், இறைதூதர் இயேசு அவர்களுக்கு இன்ஜீல் என்ற வேதமும் அருளப்பட்டது. ஆக, இவ்வாறு உலகெங்கும் இருக்கும் எல்லாச் சமுதாயத்திற்கு இறைத்தூதரும் இறைசெய்தியும் இறைவனால் அனுப்பப்பட்டது. அந்த வேத புத்தகத்தின் போதனைகளை உளமாற இறைதூதர்கள் நம்பி, தானும் பின்பற்றி, மக்களை இந்த நற்போதனைகளின் பால், ஏக இறைவனின் பக்கம் அழைத்தனர். இவ்வாறு இறைவனின் செய்திகளை அறிவித்து நல்லதின் பக்கம் அழைத்த இறைதூதர்களில் சிலர் கொல்லப்பட்டனர்; அருளப்பட்ட இறைவேதங்கள் எரிக்கப்பட்டன; அழிக்கப்பட்டன; இன்னும் பல மாறுதல்களுக்கு உள்ளாயின. 

இப்படியிருக்கும் பட்சத்தில், இறுதியாக, கி.பி. 610 ல், முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறைவனின் இறுதி தூதராக தேர்ந்தேடுக்கப்பட்டவர். முந்தைய இறைத்தூதர்களை போல, குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு என்று மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு தூதராக அனுப்பப்பட்டார். முந்தைய இறைதூதர்களுக்கு அருளப்பட்டதில் சில அழிக்கப்பட்டது போல, திரிக்கப்பட்டது போல அல்லாமல், இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த மக்களுக்கும், அதற்கு பின்னுள்ள அனைத்து மக்களுக்காக அருளப்பட்ட வேதமோ, யாராலும் அழிக்கமுடியாத மாற்றியமைக்கமுடியாத வகையில் விளங்கி வருகிறது அந்த வேதம். அந்த வேதம், குர்ஆன் ஆகும். 

ஏன் அழிக்க முடியாது.? 

அழிக்கமுடியாத மாற்றியமைக்கமுடியாத வேதமா? அதெப்படி? என நினைக்கலாம். ஏன் ஒட்டுமொத்த புத்தகத்தையும் எரித்துவிட்டால், அழிந்துவிடுமே என்றும் நீங்கள் கேட்கலாம். (ஒரு வாதத்திற்காக) இதை நீங்கள் செய்தாலும் அழிக்கமுடியாது. கோடான கோடி பிரதிகளை அழித்தாலும், ஏன் சி.டி, டிவிடி, இணையதளம் என்று அனைத்து தொழில்நுட்பத்திலிருந்தும் அழித்தாலும், அது அழித்ததாக ஆகாது. ஏனெனில் அவற்றை கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனங்களின் இறைவன் பாதுகாத்து வைத்துள்ளான். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் குறைந்தப்பட்சம் ஒரு நபராவது குர்ஆன் ஐ முழுவதுமாக மனனம் செய்தவராக இருப்பார். இந்தியாவில் மூன்று லட்சம் பள்ளிவாசல்கள்; அப்படியெனில், சிறுபான்மையினராக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் மட்டும், குறைந்தபட்சமாக மூன்று லட்சம் பேர் மனனம் செய்துள்ளனர். அப்படியெனில், முழு உலகில் ..? மனனம் செய்வதற்காக உலகில் ஏகப்பட்ட பாடசாலைகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக உலக அழியும் வரை அழிக்கமுடியாத ஒரே வேதம் குர்ஆன்.

No comments:

Post a Comment