Tuesday, November 28, 2017

இயேசு தேவகுமரானாக இருக்க அவரை இறைத்தூதர் என்று சொல்வதேன் ?

இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர்' என்றும் ஒரே இறைவனாகிய கர்த்தரை (/அல்லாஹ்/படைப்பாளானை) மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்த வாதிகளில் ஒருவர்' என்றும் முஸ்லிம்கள் நம்புகிறோம் .

இறைவனுக்கு மகனா...?

இறைவன் தனித்தவன்
யாரிடமும் எந்தத் தேவையுமற்றவன்
அவன் யாரையும் பெறவில்லை
யாராலும் பெறப்படவுமில்லை
அவனுக்கு நிகராக யாருமே இல்லை
அவனே அகிலங்களைப் படைத்தவன்
பரிபாலிப்பவன்
ஆக்க, அழிக்க ஆற்றலுள்ளவன்
என்றென்றும் நிலையாக ஜீவித்திருப்பவன்.


இதுவே கடவுளைப் பற்றி அறிவுக்குப் பொருத்தமான உண்மை. கடவுளுக்கு மனைவி, மக்கள், அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற உறவினர்களைக் கற்பனை செய்து, கடவுளின் தன்மையை சிலர் மாசுபடுத்துகின்றனர். தங்களுக்கு வேதமுண்டு; அது தீர்க்கமான சான்றுகளைக் கொண்டது என்று நம்புகின்ற கிறித்தவச் சகோதரர்களும் இந்த மாயையில் வீழ்ந்து பைபிளின் சான்றுகளுக்கும், இயேசுவின் போதனைக்கும் மாற்றமாக, 'இறைவனுக்கு மகன் உண்டு' என்று நம்பி வருகின்றனர்.

கடவுளுக்கு மகன் தேவையில்லை! யார் மரணத்தையும், முதுமையையும், பலவீனத்தையும் எதிர்பார்க்கிறாரோ அவருக்குத் தான் சந்ததிகள் தேவை! யார் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் - தங்களின் தள்ளாத வயதில் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக - வாரிசு தேவை! மனிதனிடம் இந்தப் பலவீனங்கள் இருக்கும் காரணத்தினால் தான் அவன் வாரிசுகளை விரும்புகிறான்.
மரணமோ, முதுமையோ ஏற்படாது எனும் உத்தரவாதத்துடன் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ஒரு போதும் அவன் வாரிசை விரும்ப மாட்டான். தன் மீது காரணமில்லாமல் சுமைகளை ஏற்றிக் கொள்ளவும் மாட்டான். மரணம், முதுமை போன்ற பலவீனங்களை எதிர்பார்த்திருக்கும் போதே,குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது சிரமம் என்றெண்ணி இரண்டோடு மனிதன் நிறுத்திக் கொள்கிறான். உருவான கருவைக் கூட கலைத்து விடுகிறான்.
சந்ததிகளால் தனக்கு ஆதாயம் இருக்கிறது என்ற நிலையிலேயே ஒரு அளவுக்கு மேல் குழந்தைகளை விரும்பாத மனிதன், குழந்தைகளால் எந்த ஆதாயமும் இல்லை என்றால் ஒருக்காலும் குழந்தைகளை விரும்ப மாட்டான். கடவுளை நம்புகின்ற மக்கள் கடவுளுக்கு மரணம் உண்டு என நம்புவதில்லை. கடவுள் களைப்படைந்து விடுவார் என்றும் நம்புவதில்லை. அவ்வாறிருந்தும் கடவுளுக்குச் சந்ததிகளைக் கற்பனை செய்து விட்டனர். கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே கடவுளுக்குச் சந்ததி தேவையில்லை என்பதை மறுக்க மாட்டார்.

பைபிளின் படி பல தேவகுமாரர்கள் :

அதே நேரத்தில் பைபிளில் இயேசு அவர்களை மட்டும் தேவகுமாரன் என்று சொல்லப்படவில்லை மாறாக பலரையும் சொல்லியுள்ளது . அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது.(மத்தேயு 3:17)

'என்னுடைய நேச குமாரன்' என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்? என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.

கர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும். பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.
பைபிளில் இறை மகன்' என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.

இஸ்ரவேல் இறை மகன்:

அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்  'இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்' என்றார்.(யாத்திராகமம் 4:22,23)

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.
(எரேமியா 31:9)

இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும். ஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார். இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை?  என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்' (சங்கீதம் 2:7) என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான். (முதலாம் நாளாகமம் 17:13)

சாலமோன் இறை மகன்:

அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். *அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.* நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
(முதலாம் நாளாகமம் 22:10)

எப்ராயீம் இறை மகன்

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.(எரேமியா 31:9)

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.(இரண்டாம் சாமுவேல் 7:14)

இயேசு இறை மகன்' எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன்' எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.

எல்லா மக்களும் தேவ குமாரர்கள்:

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! (உபாகமம் 14:1)

இறை மகன்' எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள்' எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; இறைவனின் அடியார்கள்' எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம். இறை மகன்' என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

இயேசுவின் வாக்கு மூலம் மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள்' என்று சொல்லியிருக்கிறார். 

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்.
(மத்தேயு 5:9)

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.
(மத்தேயு 5:45)

அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
(லூக்கா 6:35)

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்றுஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்.
(ரோமர் 8:16)

அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.
(இரண்டாம் கொரிந்தியர் 6:18)

எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.
இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.
இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.
இதிலிருந்து குமாரர்' எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தங்கள் மனோ இச்சைப் பிரகாரம் விளக்கம் கொடுத்துப் புரிந்து கொள்வதை விட பைபிளின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டால் தான் பைபிளை மதித்தவர்களாக ஆக முடியும். 

இறை மகன், இறைக் குமாரன் என்பன போன்ற சொற்களுக்கு இறைவனிலிருந்து பிறந்தவர்,அதனால் இறைவனாகவே ஆகிவிட்டவர் என்று பொருள் கொள்வதா?

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். (மத்தேயு 23:9)

பூமியில் உள்ள ஒருவரையும் பிதா - தந்தை என்று சொல்லக் கூடாது என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகிறது. அந்தக் கட்டளையின் பிரகாரம் நம்மைப் பெற்ற தந்தையைக் கூட தந்தை என்று கூறக் கூடாது. அவ்வாறு கூறினால் இந்தக் கட்டளையை மீறுவதாக ஆகும். ஆனாலும் ஒவ்வொரு கிறித்தவரும் தனது தந்தையை தந்தை என்று தான் கூறுகிறார். அப்படியானால் ஒருவரையும் பிதா என்று கூறக் கூடாது என்ற கட்டளையை அவர் மீறுகிறாரா? என்பதைச் சிந்திக்கும் போது தான் இங்கே பிதா' என்பது எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் பிதா என்பது இரண்டு பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதும் புரிகிறது.

படைத்தவன், கடவுள் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு. பெற்ற தந்தை எனவும் பொருள் உண்டு. படைத்தவன், கடவுள் என்ற பொருளிலேயே இங்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

'பூமியில் உள்ள எவரையும் கடவுள் என்று கூறாதீர்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் கடவுள்' என்று சொல்லிப் பார்த்தால் இதன் அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.

'பூமியில் உள்ள எவரையும் உங்கள் தந்தை என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருப்பவரே உங்கள் தந்தை' என்று சொல்லிப் பார்த்தால் அது அனர்த்தம் ஆகிறது.

பிதா' என்பதற்குப் படைத்தவன்' என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் குமாரன்' என்பதற்கு படைக்கப்பட்டவன்' என்ற பொருளைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது.
பிதா என்பதற்கு இறைவன்' என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் மகன் என்பதற்கு அடியான்' என்பது தான் பொருளாக இருக்க முடியும்.

இந்தச் சாதாரண உண்மையைக் விளங்கிக் கொண்டால் 'இயேசு இறைவனுக்குப் பிறந்தவர்; அதனால் இறைவனாகவே ஆகி விட்டவர்' என்று கூற மாட்டோம்.

மற்ற மனிதர்களை எல்லாம் தேவகுமாரன் என்றெல்லாம் சொன்ன இடங்களில் வெறும் தேவகுமாரன் என்றே உள்ளது, ஆனால் இயேசுவை பற்றி சொல்லுகையில் , ஒரே பேறான/ ஜனப்பித்த குமாரன் (Begotten Son) என்று சொல்லப்பட்டுள்ளது .அதனால் தான் நாங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கூறலாம் . ஆம்,இயேசு அவர்களை பற்றி அவ்வாரே குறிபிடப்பட்டுள்ளது ;

பைபிளின் நான்கு இடங்களில் உள்ளது. 

(i) யோவான் 1 அதிகாரம் 14. அந்த வார்த்தை மாம்சமாகி,  கிருபையினாலும் சத்தியத்தினாலும்  நிறைந்தவராய்,  நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;  அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. And the Word was made flesh, and dwelt among us, (and we beheld his glory, the glory as of the only begotten of the Father,) full of grace and truth. 

KJV (King James Version) பதிப்பு பைபிளில் இப்படியிருக்கிறது. ஆனால் NIV (New International Version) பைபிளில் இல்லை, இந்த "பேரான /ஜனப்பித்த " வாா்த்தையை அகற்றிவிட்டார்கள். ஏனென்றால் (மூலப்பிரதி தான் இல்லையே)  இருக்கின்ற பழைமையான பிரதியில் இந்த வாா்த்தை இல்லை, இடை சொருகப்பட்ட வார்த்தை என்ற காரணத்தினால் .

ஆதாரம்; கீழுள்ள லிங்கில் எல்லா பைபிள் பதிப்புகளையும் ஓப்பிட்டு பாா்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். https://www.biblegateway.com/verse/en/John%201:14 

(ii) யோவான்  3 அதிகாரம்  16. தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனைவிசுவாசிக்கிறவன்  எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய்  உலகத்தில் அன்புகூர்ந்தார்.  For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not  perish, but have everlasting life. 

இதுக்கும் இதே  நிலைமை  தான், ஒரே பேரான என்ற வார்த்தை இடையில் இட்டுக்கட்டப்பட்டது. மூலப்பிரதிகளில் இல்லை.https://www.biblegateway.com/verse/en/John%203:16 

(iii) யோவான்  3 அதிகாரம்  18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடையநாமத்தில்  விசுவாசமுள்ளவனாயிராத படியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. He that believeth on him is not condemned: but he that believeth not is condemned already, because he hath not believed in the name of the only begotten Son of God.

இந்த வசனத்திற்கும் அதே நிலையே ..https://www.biblegateway.com/verse/en/John%203:18 

(iv) I யோவான்  4 அதிகாரம் 9. தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம்  பிழைக்கும்படிக்கு தேவன்  அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால்  தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.  In this was manifested the love of God toward us, because that God sent his only begotten Son into the world, that we might live through him.  

இந்த வசனத்திற்கும் அதே நிலையே ..https://www.biblegateway.com/verse/en/1%20John%204:9 

ஆக, இருக்கின்ற நான்கு வசனங்களில் வரும் வார்த்தைகளும் இட்டுகட்டப்பட்து என்பதனால் பல பைபிள் பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

இன்னொரு இடத்கில், கர்த்தர் ,தாவீதை ஜனபித்ததாக சொல்லப்படும் வசனத்தில் எந்த பிரிச்சனையும் இல்லை என்பது முக்கிய அம்சம் .

(சங்கீதம் 2 அதிகாரம் 7.) தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய  குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.

இந்த வசனத்தில் இருக்கும் 'ஒரே பேரான' என்ற வார்த்தை எந்த பதிப்பும் நீக்கப்படவில்லை. அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இயேசுவை குறித்து கர்த்தர் சொல்கையில்,"இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்(அடிமை) ..." (மத்தேயு 12:18) 

ஆக, குர்ஆன் மட்டுமல்ல பைபிளில் கூட இயேசு அவர்களை இறைவனின் அடியானாகவே போதிக்கிறது. இவ்வாறான பல காரணங்களால், நாங்கள் இயேசு அவர்களை கண்ணியமிக்க இறைதூதர் என நம்புகிறோம். 

No comments:

Post a Comment