Tuesday, November 28, 2017

இயேசுநாதரை ஏன் தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள்?

இயேசுநாதரை மட்டுமல்ல, முஸ்லிம்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகின்றனர்.  இதில் ஆதாம் முதல் நோவா, தாவீது, சாலமன், மோசே, இயேசு உட்பட அனைத்து முந்தைய இறைத்தூதர்களும் அடக்கம். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. 

"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், ஆப்ரகாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும், இயேசுவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. (திருக்குர்ஆன்  2:136)

இயேசு அவர்களை ஒரு இறைத்தூதர் என்று நம்பும் நாங்கள் ஏன் அவரை தேவனாக ஏற்று கொள்வதில்லை என்று பார்ப்போம். ஆதாம், நோவா, தாவீது, சாலமன், மோசே போன்ற முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த அதே ஏக இறைக் கொள்கையையே – அதாவது படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையையே தான் இயேசு அவர்களும் போதித்தார் என்றே நாங்கள் நம்புகிறோம். இதுவே இஸ்லாத்தின் நிலைப்பாடும் கூட. 
இயேசு மக்களிடத்தில் பிரச்சாரம் செய்ததை குர்ஆன் சொல்கிறது. 

"இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் (கிறிஸ்து) கூறினார். (திருக்குர்ஆன் 5:72) 

ஆக, அல்லாஹ்வை / (பைபிளின் பிரயோகப்படி) பிதாவை தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது என்பதே இயேசு அவர்களுடைய போதனை என்று அறிய முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், பைபிளிலும் இவ்வாறான கருத்துகள் காணக்கிடைக்கின்றன. 

வேதாகமத்தில் தேவன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று இயேசு தெளிவாக கூறுகிறார்: 

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."  - (லூக்கா, 4 அதிகாரம், 8வது வசனம்.) 

மேற்கண்ட வசனத்தில், இயேசு அவர்கள், சாத்தானை பார்த்து, "உன்னை படைத்ததே நான் தான், நீ என்னை வணங்கு என்று சொல்லவில்லை, மாறாக,தேவனாகிய அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வீராக என்று தான் சொன்னார்.
மேலும் இயேசு, தேவன் ஒருவனே என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்." (- மாற்கு, 12 அதிகாரம், 29வது வசனம்.)

ஒருவேளை, இயேசு அவர்கள் தன்னை கடவுளென மக்களுக்கு போதிப்பவராக இருந்திருந்தால், எவ்வாறு இப்படி போதிப்பார்..? மேற்கண்ட வசனத்தில், மக்களை அழைத்து, நம்முடைய கடவுள் ஒருவர் தான் என்று கூறுகிறார். "நம்முடைய" என்ற வார்த்தை உபயோகத்தின் மூலம், தான் கடவுள் அல்ல,தனக்கும் அவர்தான் கடவுள் என்பது சாமானியனுக்கும் புரிகிற எளிமையான விசயம் தான். :

இயேசு அவளிடம், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச் செல்லவில்லை. ஆனால் போய் என் சகோதரர்களிடம், ‘நான் என் பிதாவிடமும் உங்களின் பிதாவிடமும் செல்கிறேன். நான் என் தேவனிடமும் உங்களின் தேவனிடமும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார். (யோவான் 20:17) 

மேற்கண்ட வசனத்திலுள்ள, "என் பிதா, என் தேவன்" என்ற வார்த்தைகள், அவர் கடவுள் அல்ல என்பதனை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. வேதாகமத்தில் ஒரு இடத்தில் கூட, இயேசு அவர்கள், தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று போதித்தது போல் அமைந்த, எந்த குழப்பமுமில்லாத மிகத் தெளிவான நேரடியாக சொல்லும் ஒரு வசனம் கூட பைபிளில் இல்லவேயில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ள வேதாகம வசனத்தை படியுங்கள்:

"இவ்விதமாய்க் இயேசு அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்." மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனம்.

இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று மேலே உள்ள வேதாகம வசனம் கூறுகிறது. இயேசுவும் தேவன் என்று நம்பினால், தேவன் அவர் அருகில் அமர்ந்துள்ள இயேசு (தேவன்) என்று இப்போது நாம் இரண்டு தேவன்களை காண்கிறோம்.  கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையிடம் இந்த மாற்கு 16 அதிகாரம் 19 வது  வசனத்தில் எத்தனை தேவன்களை காண்கிறாய் என்று கேட்டு பாருங்கள். கண்டிப்பாக இரண்டு என்றே கூறும். இரண்டு தேவன்கள் இயேசு கற்பித்த இறைக் கொள்கைக்கு முரணாக அல்லவா உள்ளது? பல தெய்வ வணக்கம் ஒரு பெரும் பாவம்  என்று வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது. 

"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." (யாத்திராகமம், 20 அதிகாரம், 3-5 வசனங்கள்.)

மேலும், இறைவனால் அனுப்பப்பட்ட எந்த இறைதூதரும் தன்னை தேவன் என்று ஒரு போதும் சொல்லவே மாட்டார். இந்த வேதாகம வசனத்தைப் பாருங்கள். "பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;" (மாற்கு 10 அதிகாரம் 18 வது வசனம்.) 

இந்த வசனத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களை ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால், அதற்கு நீங்கள் "நீ என்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வானேன்? ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், "இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;" என்று இயேசு சொன்னால், இயேசு தேவன் இல்லை என்று தானே அர்த்தம். திருக்குர்ஆன் இந்த விடயம் குறித்துக் கூறுவதைப் பாருங்கள்:

எந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், இறைதூதர் எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே இறைதூதர் கூறுவார்.) 3:79

இயேசு தான் ,தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை, இயேசுவை தேவன் என்று நம்பினால், இரண்டு தேவன்கள் ஏற்பட்டு "பல தெய்வ வணக்கம்" செய்த பாவத்திற்கு ஆளாவோம் என்பதனை நினைவில் வைத்து சிந்தித்து செயல்படுவோம்.

No comments:

Post a Comment