Tuesday, November 28, 2017

மனிதனை வணங்க சொல்லும் மார்க்கமா இஸ்லாம்?

கேள்வி: எல்லா படைப்புகளும் அல்லாஹ்வை தான் வணங்கவேண்டும், பிறகு ஏன் அல்லாஹ் , வானவா்களை  ஆதாம் நபிக்கு சஜ்தா (சாஸ்டாங்கம்) செய்ய கட்டளையிட்டான்? 

பதில்: 
முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34,  7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது. முதலில் ஸஜ்தா என்ற சொல்லின்  பொருள் என்ன என்று பார்ப்போம்.  ஸலாத் - தொழுகை, ஸவ்ம் - நோன்பு, ஸகாத் போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பிறப்பதற்கு முன்பே அரபுகளால்  பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில்இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. தொழுகையைக் குறிப்பிட "ஸலாத்'' என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும். இப்பொருளில் தான் அரபுகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு "ஸலாத்'' என்ற வார்த்தையை இஸ்லாம் பயன்படுத்தியது. "ஸவ்ம்'' என்ற வார்த்தை நோன்பைக்  குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் "கட்டுப்படுத்திக்  கொள்ளுதல்'' என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.  இஸ்லாம் புதிய வார்த்தைகளைக்  கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த  வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது. இது போலவே ஸஜ்தா என்ற சொல்லும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது. நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில்  பணிவது "ஸஜ்தா'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால்  இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள்  இல்லை. "நன்றாகப் பணியுதல்'' என்பதே இவ்வார்த்தையின்  பொருளாக இருந்தது. 

பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களும் "ஸஜ்தா'' எனக் குறிப்பிடப்பட்டன. அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும்  "நன்றாகப் பணியுதல்'' என்ற பொருளில் இவ்வார்த்தை பல  இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
நீங்கள் இவ்வூரில் ஸஜ்தாச் செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்!  (திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161) 

அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத்தான் இவ்வசனங்களில்  உள்ள ஸஜ்தா என்ற சொல்லுக்குக் கொடுக்க முடியும். இஸ்லாமிய வழக்கில் உள்ள "ஸஜ்தா''வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச்  செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.  

மனிதர்கள் மட்டுமின்றி சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச்  செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது. 

இவற்றுக்கு முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக்  கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான  முதுகும் கிடையாது. மலைகளோ, மரங்களோ இருக்கின்ற  இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும்,  இவை தனக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தாவாகும். மரங்கள் பூத்துக் காய்த்துக்  குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா ஆகும். 

இப்பூமியைத் தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும்  பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகள்  செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.  மொத்தத்தில் படைக்கப்பட்ட அனைத்தும்  இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான்  இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.  திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49 ஆகிய  வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத்  தெளிவாக அறியலாம். வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச்  செய்ததாகக் கூறும் மேற்கண்ட  வசனங்களையும் இப்படித்தான்  புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.  வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர்.அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. எனவே, வானவர்களை நம்மைப் போன்றவர்களாகக் கருத முடியாது.  அவர்களால் பணிவை எவ்வாறு வெளிப்படுத்த  முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும். 

No comments:

Post a Comment